Archive for April, 2009

மனுதர்மமும் மனிததர்மமும்

April 12, 2009

“Writing the beginning of anything is as difficult as finding out the origin of the universe” என்ற Robert Mccrumன் வரிகளை இப்பத்தியை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற குழப்பத்திற்கு நடுவே நினைவு கூர்ந்தேன். கிட்டத்தட்ட 50 நிமிட யோசிப்புகளுக்கு பிறகு இவ்வாறு ஆரம்பிக்கிறேன்.

இன்றைய Pizza,Pub,Dating மற்றும் இன்னபிற கடன்வாங்கிய கலாச்சாரங்களை உட்கொண்டு நாம் ஒழுக்கமாக வாழும் முறைமையிலிருந்து பிறழ்ந்து விட்டோமோ என்ற கேள்வி பலமுறை எழுந்ததுண்டு.இவ்வாறு எழும்போதெல்லாம் எது சரி,எது தவறு என்று தீர்மானிக்கும் காரணிகள் ஒவ்வொரு மனிதனிடமும் வேறுபடும் என்று ஆறுதல் சொல்லிக்கொள்வதுண்டு.

ஏனெனில்,

 “ந தர்மா தர்மௌ க்ரத ஆவம் ஸ்வ இதி

   ந தேவகந்தர்வா ந பிதர இதி

  ஆஸக்ஸதே யம் தர்மோ யம் அதர்மோ இதி”

 அதாவது, சரி(தர்மம்) அல்லது தவறு(அதர்மம்) இவ்விரண்டும் இதுதான் நாங்கள் என்று சொல்லிக்கொள்ள இயலாது.முன்னோர்களாலும்,கடவுளர்களாலும் கூட சரி எது,தவறு எது என்பதை நிர்ணயிக்க இயலாது என்ற ஆபஸ்தம்ப சூத்திரத்தின் வரிகள் நான் சொல்வதை அங்கீகரிக்கிறது என்ற அகம்பாவம்.

 இவ்வாறிருக்க, காஞ்சி மகாபெரியவர், நாம் வாழ்வில் எப்படி நடக்க வேண்டும் என்று புராணங்களில் கூறியுள்ளன, வாழ்வின் ஏதோ ஒரு காலகட்டத்தில் இப்படி நடந்து கொள்ளலாமா அல்லது இதைச் செய்யலாமா என்று கேள்வி எழும்போது,அக்கேள்விகளுக்கு புராணங்களில் பதில் தேடவேண்டும்.புராணங்களில் பதிலில்லையெனில்,மனுதர்மத்தில் சொல்லியிருக்கும்படி நடக்கவேண்டும் என்று சொன்னதைப் படிக்கும்போது,மேற்சொன்ன அகம்பாவம், ஆற்றில் எரிந்த தீக்குச்சிப் போல் அணைந்துபோனது.

 சரி, இவ்வளவு பீடிகை எதற்கு? மனுதர்மத்தைப் பற்றிக் கதைக்கவே.

 சுமார் 2685 verses கொண்ட மனுதர்மம் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நடந்து கொள்ள வேண்டிய விதிகளை,வழிமுறைகளை வலியுறுத்துகின்றன.ஆணுக்கும், பெண்ணுக்குமான சமூக உறவு,பிறப்பு,இறப்பு,மறுபிறவி என வாழ்வின் எல்லா நியமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இப்படிப்பட்ட மனு சொல்லியிருக்கும் தர்மங்களை,இனி வரவிருக்கும் ஒவ்வொரு பத்தியின் முடிவிலும்,ஒன்று அல்லது இரண்டு மனுவிதிகளை குறிப்பிட விருப்பம்.

மனுதர்மத்தை ஒரு மததர்மம் என்று கொள்வது தகாது.இது ஒட்டுமொத்த மனிததர்மம் என்பது என் கருத்து.காரணம், “அவரவர் இறையவர் குறைவிலர்” என்ற பிரபந்த வரிகள் வலியுறுத்துவதையே,”We believe in that which has been bestowed from high upon us, as well as that which has been bestowed upon you, for our god and your god is one and the same” என்ற குர் ஆனின் வரிகளும் வலியுறுத்துகின்றன.சற்று ஆழமாக யோசித்தால்,இவ்விரண்டும் போதிப்பது ஒரு விதமான சுய ஒழுக்கத்தையேயாகும்.அதேபோன்று, சொர்க்கம்,நரகம் மற்றும் Judgement Day போன்றவையும் வாழ்வில் நல்லொழுக்கத்தைப் பின்பற்றுதலின் அத்தியாவசியத்தையே பறைசாற்றுகின்றன.இவ்வாறு வாழும் முறைமை எல்லா சமயத்தினருக்கும் பொது.அவற்றையே மனுதர்மம் எடுத்துரைக்கின்றது.

 மேற்சொன்ன வாக்கியங்கள் கண்டணங்களிலிருந்து தப்பித்தலுக்கான வாக்கியங்கள் என்று தோன்றினால் அது ஒரு வகையில் உண்மையே.ஏனெனில், பாரதி போன்ற நாடுபோற்றும் கவியை மதவாதி என்று பிதற்றித்திரியும் அறிஞர்கள் வாழும் சூழலில் நானும் வாழ்கிறேன் என்ற பிரக்ஞையின் மேலோங்களே இதற்குக் காரணம். மனுதர்மத்தை இனிவரும் பத்திகளில் குறிப்பிடவேண்டும் என்று பணித்ததன் காரணங்கள் கீழ்க்கண்டவை

1. இன்னும் 5 அல்லது 6 தலைமுறைகளுக்குப் பிறகு மனுதர்மம் போன்ற புத்தகங்கள் ஜீவித்திருக்குமா என்பது பெரிய கேள்விக்குறியே.இன்றும், சுஜாதா இல்லையெனில், குறுந்தொகை,புறநானூறு மற்றும் இன்னபிற சங்க இலக்கியங்கள் நம்மை இந்த அளவுக்கு அடைந்திருக்குமா என்பது சந்தேகமே.

 மேற்சொன்ன காரணத்தை Literal-ஆக எடுத்துக்கொண்டு, சுஜாதா செய்ததை நீ செய்து கிழிக்கபோகிறாயா என்ற வாதத்துக்கு வரவேண்டாம், நான் மேலே சொல்ல வந்த Point அதுவல்ல.

2. இணையத்தில் பதிதலின் இன்னொரு முக்கிய நன்மை, ஒருவேளை, Dystopic Science Fiction-ன் கரு போல,நாளை எல்லா புத்தகங்களும் எரிந்து போகும் நிலை ஏற்பட்டாலும், இணையம் நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையும், இணையத்தின் சாசுவதத்தின் மேல் உள்ள நம்பிக்கையும்.

3. ஆத்திசூடி,வந்தே மாதரம் போன்றவற்றை டிரம்ஸ் சத்தங்களினூடே மட்டுமே கேட்கத்தயாராயிருக்கும் அவலம் தமிழ்ச்சமூகத்திற்கு மட்டுமே உரியது.இவ்வாறிருக்க, இதுபோன்ற புத்தகங்களின் நிலைத்ததன்மை மிகவும் யோசிக்க வைக்கிறது.

இவைதான் முக்கியக்காரணங்களே தவிர, சமூகத்தைத் தனியாளாகத் திருத்த வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான நோக்கமன்று. இன்று சீரழிந்துவரும் கலாச்சார சூழலில் இவ்விதிகள் ஒரு வேகத்தடை போன்று உபயோகப்பட்டால் ஒரு ஒட்டுமொத்த சீரழிவிலிருந்து மீளமுடியும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.மாற்றம் என்பது மானிட இயல்பு,இதெல்லாம் பழமைவாத சிந்தனை என்று சொல்பவர்களைப்பற்றிய அக்கறை எனக்கு இல்லை.

”You are the Creator of your own Destiny” என்ற நரேந்திரநாத்தின் வரிகளிலும், இனியொரு விதி செய்வோம் என்ற பாரதியின் வரிகளிலும் எனக்கு எப்போதும் நம்பிக்கையுண்டு.அந்த நம்பிக்கை கொடுக்கும் தைரியத்துடன் இனிவரும் பத்திகளின் கடைசியில் மனுதர்மத்தில் சொல்லியிருக்கும் விதிகளை அப்படியே எழுதுகிறேன்.

Advertisements

கமல்ஹாசனும் விமர்சனங்களும்

April 5, 2009

 

சமீபகாலமாக தசாவதாரத்தின் மீதான விமர்சனங்களும்,கமலுக்கு ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதில் ஆற்றாமை போன்ற சாடல்களும் ஓய்ந்திருக்கும் வேளையில் இன்று தொலைக்காட்சியில் கமல்ஹாசனின் பேட்டி ஒளிபரப்பானது.

 

இப்பேட்டியில் கமல்ஹாசன் தன் சினிமா மீதான விமர்சனங்களுக்குத் தந்த பதில்கள் மிகவும் Logicalஆகத் தோன்றியது. குறிப்பாக, பேட்டியாளர் கமல்ஹாசனின் சினிமா மீதான உள்ள Negative Criticisms பற்றி கேட்ட பொழுது

“There are honest criticisms which I really value, but there are some critics who try to prove their intelligence.When they try to prove their Intelligence, let them” என்றார். இதைக்கேட்டபோது, இது கமலின் படைப்புகளுக்கு மட்டும் அல்லாது பொதுவாக தமிழ்ச் சமூகத்தின் விமர்சன சூழலின் நிலையும் இதுவே என்று தோன்றியது. கண்ணாடியே தன்னை விமர்சிக்கும் சிறந்த விமர்சகர் என்றார்.

 

கமல் தன் மீதும், தன் படைப்புகளின் மீதும் வீசப்படும் விமர்சனங்களின் நேர்மையையும், விமர்சகர்களின் நேர்மையையும் சரியாக புரிந்து வைத்திருக்கிறார் என்பது உறுதி. நேர்மையற்ற விமர்சனம் முயற்சியைத் தடைப்படுத்த இடம் தராமல்,ஒரு படைப்பாளி தன் படைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இப்புரிதல் மிகவும் அவசியம். இப்புரிதலின் விளைவே அன்பே சிவம்,ஹே ராம்,மகாநதி போன்ற சோதனை படைப்புகள் என்பது என் எண்ணம்.

 

“I Prefer honesty and always want to be a honest man” என்று சொல்லி, honestஆன வாழ்க்கை நடத்தல் மூலம் வெவ்வேறு காலகட்டங்களில் என்னை நானே முரண்பாட்டிற்க்குட்படுத்தவேண்டிய சங்கடம் இல்லை என்றார். கமல்ஹாசனைப் பொறுத்தவரை இது ஒரு போலித்தனமில்லாத வாக்கியங்களாகவே நினைக்கிறேன்.ஒரு உதாரணம்,2007ம் ஆண்டு கமல்ஹாசன் அளித்த ஒரு பேட்டியில்,ஆஸ்கர் அமெரிக்கத்தரத்திற்கான ஒரு உயரிய விருதேயன்றி,அதுவே உலகத்தரமாகாது என்று சொன்னபோது, பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்,இன்றும் கமல் அதே வாக்கியங்களைச் சொல்லும்போது ஆற்றாமை என்று சாடுவதில் உள்ள நியாயம் புலப்படவில்லை.

 

நேர்மையற்ற விமர்சனங்கள்/விமர்சகர்கள் மீது கோபம் வருவதில்லையா எனப் பேட்டியாளர் கேட்டபோது,முதலில் கோபம் வந்தாலும், There are kids who wet their pants in the bed, அம்மா அவர்கள் மீது கோபம் அடைவதில்லை.அதே போன்று, there are people who cannot limit their tongue, அனுபவம் அவர்களை மாற்றிவிடும் என்று கமல் சொல்லும்போது, இன்று பரவியிருக்கும் தொட்டாசிணுங்கி சூழலில்,ஒரு சீனியர் கலைஞனின் நாகரிகமான பேச்சு சந்தோஷப்படவைத்தது.

 

இப்பேட்டியில், நான் ரசித்த மற்றொரு விஷயம், கமலின் வெளிப்படையான அபிப்ராயங்கள்.எந்த தனிநபர் மீதும்,முக்கியமாக, நேர்மையற்ற விமர்சகர்கள் பற்றி கூறும்போதுகூட பொதுப்படையாக,காழ்ப்புணர்ச்சியின்றி,பண்பட்ட வார்த்தைப் பிரயோகங்களே செய்தார். இந்த மனோபக்குவம் எந்தவொரு படைப்பாளிக்கும் அவசியம் என்பது என் அபிப்ராயம்.

 

 

கமல்ஹாசன் என்ற மிகச்சிறந்த Establishmentன் நீண்ட நாளைய வெற்றிக்கு இம்மனோபக்குவமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

வள்ளுவன்

April 4, 2009

நான் தொலைக்காட்சியில் விரும்பிப்பார்க்கும் வெகுசில சினிமா சாரா  நிகழ்ச்சிகளில் “எங்கே பிராமணன்” தொடரும் ஒன்று. தொடரின் நடுவே சோ தரும் இந்துமதம் சார்ந்த விளக்கங்களும்,கீதையின் ஸ்லோகங்களும், புராணங்களிலிருந்து தரும் சுவையான கதைகளும் சோவின் மேதைமைக்குச் சான்றுகள்.

சென்ற வார Episodeல், ஒரு சில குறள்களை மேற்கோள் காட்டியும், வள்ளுவர் ஜைனன் என்ற வாதம் போலியானது, அவர் இந்துவே என்ற பொருளிலும் சோ பேசியது ஒளிபரப்பானது.

உலகியல் இனிமையாக நடைபெறவும்,ஒழுக்கம்,ஆசையை ஒழித்தல் போன்ற உலக தத்துவங்களை குறளின் மூலம் போதிக்கும் வள்ளுவன் இம்மதத்தைச் சார்ந்தவர் என்ற அடைப்புக்குள் கொண்டு வர முயல்வது தவறு என்றே தோன்றுகிறது.

ஏன் தவறு என்ற காரணங்களை முன்வைத்து,விவாதங்களை எதிர்நோக்கி,பதிலளித்து ஒரு Sumo Wrestling மேடையை உருவாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அவ்வளவே.மாறாக, வள்ளுவனைப்பற்றி எழுதக்கிடைத்த சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொள்வதே சரி என்று நினைக்கிறேன்.

வள்ளுவன் என்ற சொல்லுக்கு அரசனின் கட்டளையைப் பறையறைந்து அறிவிப்பவன் என்று பொருள். இதற்கும் வள்ளுவன் பெயருக்கும் சம்பந்தம் உள்ளதா அல்லது இது ஒரு Mere co-incidenceஆ என்பது ஆராய்ச்சிக்குரியது.

நான் வள்ளுவன்பால்  ஈடுபாடு கொள்ள முக்கிய காரணங்கள், உயர் கருத்துக்களை ஏழே வார்த்தைகளில் சொல்ல முடிந்த Communication Skill மற்றும் மொழியின் ஆளுமை.

”ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு” (குறள் 190)
என்ற அறத்துப்பால் குறளிலும்

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு”  (குறள் 383)
என்ற பொருட்பால் குறளிலும்

“தஞ்சம் தமரல்லர் ஏதிலர் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி” (குறள் 1300)
என்ற இன்பத்துப்பால் குறளிலும் உள்ள கருத்து எந்நாட்டவர்க்கும்,எக்காலத்திற்கும் பொருந்தும் தன்மை வாய்ந்தவை.

வள்ளுவன் எந்த சமயத்தையும் தழுவாது எல்லா சமயத்துக்கும் பொருந்தும்படியே எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவேதான், திருக்குறள் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.

இதையே, மாமூலர் திருவள்ளுவமாலையில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

“ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார்-நன்றென
எப்பா வலரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி”.

அதாவது, திருக்குறள் தமிழ்நாட்டிற்க்கு மட்டுமின்றி உலக முழுமைக்கும் பொருந்தும் என்ற பொருளில் பாடுகிறார் மாமூலர்.

உலகில் எந்த சமயத்துக்கும்,எந்த நாட்டினர்க்கும் பொருந்தும் கருத்துக்களை உள்ளடக்கிய நூலை வள்ளுவன் இயற்றிய காரணத்துக்காகவே, பாரதி ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கண்ட தமிழ்நாடு” என்று மார்தட்டுகின்றான்.