Archive for July, 2009

இரண்டு புத்தகங்கள்

July 25, 2009

நான் சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் முக்கியமாகக் கருதும் இரண்டு புத்தகங்களைப் பற்றிய குறிப்புகளை இங்கே தர விரும்புகிறேன்.

1. மிதமான காற்றும் இசைவான கடலலையும்
2. எனது நாடக வாழ்க்கை

1. மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய 32 சிறுகதைகளின் தொகுப்பு மிதமான காற்றும் இசைவான கடலலையும் என்னும் புத்தகம்.வெயிலோடு போய்,அப்பாவின் பிள்ளை,குதிரை வண்டியில் வந்தவன்,ஏவாளின் குற்றச்சாட்டுக்கள் போன்ற கதைகள் மிகவும் ரசிக்க வைக்கின்றன.இத்தொகுப்பின் முதல் கதையான பாவனைகள் கீழ்க்கண்டவாறு ஆரம்பிக்கிறது.

                        “குதிகாலிட்டு உட்கார்ந்தான்.சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தான்.ஒரு காலை சப்பணமிட்டு ஒரு காலை நீட்டி இப்படியும், அப்படியுமாய் உட்கார்ந்து பார்த்தான்.ம்கூம்,எப்படி உட்கார்ந்தாலும் பசித்தது”.

மேலே சொன்ன வரிகளை படித்தவுடன் ஒரு சிறிய ஆச்சரியம் மேலோங்கி,முதல் வரிகளிலேயே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி,படிப்பவர்களை கதைக்குள்ளே இழுத்து, அடுத்த வரிகளிலேயே அந்த எதிர்பார்ப்பை அநாயாசாமாக உடைக்கும் தந்திரம் பிடித்திருந்தது. இக்காரணத்தால் மிகுந்த எதிர்பார்ப்புடன் 32 கதைகளையும் படித்தேன்.படித்து முடித்தவுடன் தோன்றிய உணர்வு நிஜமாகவே மிதமான காற்று வருடுவது போல் இருந்தது.

மிக யதார்த்தமான கதை மாந்தர்கள்,சுவாரசியமாய் கதை சொல்லும் திறன்,இவற்றை வெற்றிகரமாக இணைக்கும் எழுத்து நடை எனப் பல வரிகளில்,பல கதைகளில் வியக்க வைக்கிறார் தமிழ்ச்செல்வன்.

இந்த புத்தகத்தை படித்து ரசித்து முடித்த கையோடு, தமிழ்ச்செல்வனின் இன்னொரு புத்தகமான “பேசாத பேச்செல்லாம்” வாங்கி உள்ளேன். இப்புத்தகத்தைப்பற்றி வேறொரு தருணத்தில்.

2.எனது நாடக வாழ்க்கை – அவ்வை.தி.க.ஷண்முகம்

       அவ்வை.தி.க.ஷண்முகம் அவர்கள் தனது நாடக வாழ்க்கையைப்பற்றி எழுதியுள்ள புத்தகம்.இதுவரை, நாடகத்துறையில் பங்காற்றிய எவரேனும், இது போன்று எழுதி உள்ளனரா என்று தெரியவில்லை.நாடக வாழ்க்கையில் அடி எடுத்து வைத்ததிலிருந்து ஆரம்பித்து,தான் எதிர் நோக்கிய பிரச்சனைகள்,நாடகம் நடத்தும்போது நடந்த சுவையான சம்பவங்கள்,தனது சக நாடகக்கலைஞர்களைப்பற்றிய குறிப்புகள் என அருமையான அனுபவப்பகிர்வுகளை உள்ளடக்கியது இப்புத்தகம். அந்தக்காலத்தில்,ஆண்களே பெண்கள் வேடம் பூண்டனர் என்பதைப்படிக்கும்போது வியப்பாக இருந்தது.அதேபோல,கலைவாணர் N.S.கிருஷ்ணன்,M.R.ராதா போன்ற பிரபலங்கள் அவ்வை.ஷண்முகம் அவர்களின் நாடகக்கம்பெனியில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.கலைவாணர் நடிப்பில் மட்டுமின்றி மிருதங்கம்,பாடல்கள்,ஆர்மோனியம்,ஓவியம் எனப்பல கலைகளில் வித்தகராகத்திகழ்ந்தார் போன்ற உபரிக்குறிப்புகள் பல உள்ளன.

இந்தப்புத்தகத்தில் நான் வியந்த விஷயங்கள் இரண்டு.

1.அவ்வை.ஷண்முகம் அவர்களின் தமிழ்ப்பற்று மற்றும் குருபக்தி.
2. ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கு இணையாக கடைசிப்பக்கம் வரையில் அலுக்க வைக்காத அந்த எழுத்து நடை.

இந்தக்காரணம்தான், புத்தகம் படித்து முடித்தவுடன் ஒரு நாடகக் கம்பெனியுடன் காரில் ஒரு சுற்றுலா போய் வந்த உணர்வை ஏற்படுத்துகிறது.இதே போன்று சுற்றுலா உணர்வை படித்தவுடன் ஏற்படுத்திய மற்றொரு புத்தகம் தி.ஜா எழுதிய நடந்தாய் வாழி காவிரி.

                                                                                                        
சிலப்பதிகாரம் புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுக்காதையில் கீழ்க்கண்ட பாடல் வருகிறது.
 
                     இருவகைக்  கூத்தின் இலக்கணம் அறிந்து
                     பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்துப்
                     பதினோர் ஆடலும்,பாட்டும்,கொட்டும்,
                     விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து ஆங்கு

இப்பாடலுக்கான அடியார்க்கு நல்லார் உரையில் உரை முடிந்தவுடன் “அகத்தெழு சுவையா னகமெனப் படுமே என்றார் சயந்தநூ லுடையாருமெனக்கொள்க” என்று எழுதுகிறார்.

இதில் குறிப்பிட்டுள்ள சயந்த நூல் ஒரு நாடகத் தமிழ் நூல் எனத்தெரிகிறது. இந்நூல் அல்லது இந்நூலைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் உள்ளனவா என்று தெரிந்து கொள்ள ஆவல்.யாராவது தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.

ப்பத்தியை முடிக்கும்முன், பசவண்ணா எழுதிய ஒரு பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே:

                         Certain Gods
                         always stand watch
                         at the doors of people.
                         Some will not go if you ask them to go.
                         Worse than dogs, some others.
                         What can they give,
                         these gods,
                         who live off the charity of people,
                         O lord of the meeting rivers!

இப்பாடலில் இருக்கும் புத்திசாலித்தனம் புரிகிறதா!!!

Advertisements