Archive for the ‘தமிழ்’ Category

வள்ளுவன்

April 4, 2009

நான் தொலைக்காட்சியில் விரும்பிப்பார்க்கும் வெகுசில சினிமா சாரா  நிகழ்ச்சிகளில் “எங்கே பிராமணன்” தொடரும் ஒன்று. தொடரின் நடுவே சோ தரும் இந்துமதம் சார்ந்த விளக்கங்களும்,கீதையின் ஸ்லோகங்களும், புராணங்களிலிருந்து தரும் சுவையான கதைகளும் சோவின் மேதைமைக்குச் சான்றுகள்.

சென்ற வார Episodeல், ஒரு சில குறள்களை மேற்கோள் காட்டியும், வள்ளுவர் ஜைனன் என்ற வாதம் போலியானது, அவர் இந்துவே என்ற பொருளிலும் சோ பேசியது ஒளிபரப்பானது.

உலகியல் இனிமையாக நடைபெறவும்,ஒழுக்கம்,ஆசையை ஒழித்தல் போன்ற உலக தத்துவங்களை குறளின் மூலம் போதிக்கும் வள்ளுவன் இம்மதத்தைச் சார்ந்தவர் என்ற அடைப்புக்குள் கொண்டு வர முயல்வது தவறு என்றே தோன்றுகிறது.

ஏன் தவறு என்ற காரணங்களை முன்வைத்து,விவாதங்களை எதிர்நோக்கி,பதிலளித்து ஒரு Sumo Wrestling மேடையை உருவாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அவ்வளவே.மாறாக, வள்ளுவனைப்பற்றி எழுதக்கிடைத்த சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொள்வதே சரி என்று நினைக்கிறேன்.

வள்ளுவன் என்ற சொல்லுக்கு அரசனின் கட்டளையைப் பறையறைந்து அறிவிப்பவன் என்று பொருள். இதற்கும் வள்ளுவன் பெயருக்கும் சம்பந்தம் உள்ளதா அல்லது இது ஒரு Mere co-incidenceஆ என்பது ஆராய்ச்சிக்குரியது.

நான் வள்ளுவன்பால்  ஈடுபாடு கொள்ள முக்கிய காரணங்கள், உயர் கருத்துக்களை ஏழே வார்த்தைகளில் சொல்ல முடிந்த Communication Skill மற்றும் மொழியின் ஆளுமை.

”ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு” (குறள் 190)
என்ற அறத்துப்பால் குறளிலும்

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு”  (குறள் 383)
என்ற பொருட்பால் குறளிலும்

“தஞ்சம் தமரல்லர் ஏதிலர் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி” (குறள் 1300)
என்ற இன்பத்துப்பால் குறளிலும் உள்ள கருத்து எந்நாட்டவர்க்கும்,எக்காலத்திற்கும் பொருந்தும் தன்மை வாய்ந்தவை.

வள்ளுவன் எந்த சமயத்தையும் தழுவாது எல்லா சமயத்துக்கும் பொருந்தும்படியே எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவேதான், திருக்குறள் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.

இதையே, மாமூலர் திருவள்ளுவமாலையில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

“ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார்-நன்றென
எப்பா வலரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி”.

அதாவது, திருக்குறள் தமிழ்நாட்டிற்க்கு மட்டுமின்றி உலக முழுமைக்கும் பொருந்தும் என்ற பொருளில் பாடுகிறார் மாமூலர்.

உலகில் எந்த சமயத்துக்கும்,எந்த நாட்டினர்க்கும் பொருந்தும் கருத்துக்களை உள்ளடக்கிய நூலை வள்ளுவன் இயற்றிய காரணத்துக்காகவே, பாரதி ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கண்ட தமிழ்நாடு” என்று மார்தட்டுகின்றான்.

Advertisements

தமிழ்ச்சொல்

March 4, 2009

”நான்கு வேதங்களும் பத்து உபநிஷதங்களும்” என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது,வேதம் என்ற நேரடியான வார்த்தையைத் தவிர்த்து, இதே அர்த்தத்தில் உள்ள பிற சொற்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட,தேடினேன்.சில சொற்கள் அகப்பட்டன. இச்சொற்கள், இச்சொற்களை உட்கொண்ட சில வரிகள், இவ்வரிகளின் மேலோட்டமான அர்த்தம்,இவற்றைப் பற்றியே இப்பத்தி.

”அந்தணரோத்துடைமை மிகவினிதே” என்று இனியவை நாற்பதில்,அந்தணர் வேதத்தை மறவாமை இனிது எனும் அர்த்தத்திலும்,

 “வாங்கின்னா ஒத்திலாப் பார்ப்பானுரை” என்று இன்னா நாற்பதில், வேதம் ஓதுதல் இல்லாத அந்தணன் சொல் துன்பம் எனும் அர்த்தத்திலும்,

 ”ஒத்தொடு புணர்ந்த காப்புடை ஒழுக்கின்” என்று பெருங்கதையிலும்,ஒத்து என்ற சொல் வேதம் என்ற பொருளில் வருகிறது.

”ஆரணத்தின் சிரம் மீது உறைசோதியை அந்தமிழால்” என்கிறார் கம்பர்.அதாவது,வேதத்தின் உச்சியில் விளங்கும் பரஞ்சோதியான நாராயணன் என்று சடகோபர் அந்தாதியில் ஆரணம் என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

 ”எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோர் இதுவே” என்ற குறுந்தொகைப்பாடலின் “உன் வேதத்தில் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் மருந்து இருந்தால் சொல்” என்று அர்த்தம் தரும் இவ்வரிகளில் எழுதாக்கற்பு எனும் சொல் வேதத்தைக் குறிக்கிறது.

 ”அந்தண்மை பூண்ட வருமறை யந்தத்துச் சிந்தை செயந்தணர்” என்கிறார் திருமூலர், அதாவது, அந்தணர் வேதங்களை அணவுவர் என்ற பொருளிலும்,

“அருமறையின் நெறிகாட்ட,அயன் பயந்த நிலமகளை” என்ற கலிங்கத்துப்பரணியின் வரிகளில், “வேதங்களில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக, நான்முகன் படைத்த நிலமகளைக் கைப்பிடித்தவன்” என்று குலோத்துங்கச்சோழனைப் பாராட்டும் வரிகளிலும், அருமறை என்ற சொல் வேதத்தைக் குறிக்கிறது.

”வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து” என்று சிலப்பதிகாரத்தில் வேதம் என்னும் பொருளில் மறைநூல் என்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. ஆக,வேதம் என்ற பொருளில் ஒத்து,ஆரணம்,எழுதாக்கற்பு,அருமறை,மறைநூல் போன்ற சொற்கள் பிரயோகப்பட்டுள்ளன. இதே பொருளில் மேற்கூறிய சொற்களைத் தவிர்த்து, வேறு சொற்கள் உளவா எனத் தெரிந்துகொள்ள ஆசை. தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.