Archive for the ‘Uncategorized’ Category

பார்மீது நான் சாகாமல் இருப்பேன் கண்டீர்

March 21, 2010

டிசம்பர் 11 – 1882 Feudalism,Modernism என்ற இரு பெரும் சகாப்தத்தின் நடுவே கொடூரமும் அன்பும் கைகோர்த்து நடந்து செல்லும் முரண்பாடு நிறைந்திருந்த மண்ணில் பிறந்தான் பாரதி. தாழ்வு மனப்பான்மையும்,அச்சமும் சூழ்ந்திருந்த நாட்டு மக்களுக்குத் தனது கவிதைகள் மூலம் விழிப்புணர்வும்,தைரியமும் ஊட்டியவன் பாரதி. டிசம்பர் 11 – 2009.இன்று பாரதியின் 127வது பிறந்த தினம்.இப்பதிவு பாரதியை நினைவு கூறுவதற்கு அல்ல.ஏனெனில்,பாரதி எனக்கு erythrocytes போன்றவன்.பாரதியைப்பற்றி சில வரிகள் மட்டும். நாம் வளர, வளர பாரதியின் கவிதை அளவும்,செரிவும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.நேற்று ஒரு பொருள் கொடுத்த கவிதை இன்று வேறு பொருளைக்கொடுக்கிறது.பாரதியின் கவிதையும் அவை தரும் உணர்வும் விவரிக்க முடியாத அதிசயம். மேலை நாட்டுக்கவிஞர்களிடமிருந்து அவன் பெற்றதெல்லாம் கவிதைக்கு அழகு சேர்த்து இருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், கவிதை வளர்ச்சிக்கு பாரதி ஊன்றிப்படித்தது தாயுமானவர்,ராமலிங்க அடிகள்,கம்பன்,வள்ளுவன் போன்றவர்களையே. பாரதியின் தத்துவ தரிசனம் ஆச்சர்யமான ஒன்று.பஞ்சபூதங்களை வணங்குவதால் வேதக்கடவுளரை வழிபடுபவனா?கிரேக்க ஹெலனிக் வழிபாட்டில் உள்ளது போல் இயற்கையை வழிபடுபவனா?.எல்லாமே நான் என்பதால் அத்வைதத்தை வழிபடுபவனா?காண்பன யாவும் உண்மை என்பதால் உலோகாயதனா? வானமாமலை சொல்வது போல்,ஒவ்வொரு மதக்கொள்கையிலும் ஒரு அகப்பை அள்ளிக்கொண்ட கூட்டுச்சரக்கு அவன் தத்துவம்.எனவே, நிவர்த்திக்க முடியாத முரண்பாடு அதில் உண்டு.ஆனாலும்,இவையனைத்தையும் நவரத்தின மாலையாக இணைக்கும் பொற்சரடு அவனுடைய மனிதத்துவம். அவனைப்பித்தன் என்று நகைத்த சமூகத்துக்கு அவனின் கவிதைகளே பதில் அல்லது கேள்வி. — ”கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை” என்ற வரிகளைப்படிக்கும்போது பாரதியுடன் செண்பகராமனும் ஞாபகத்துக்கு வருகிறான். “ஜெய்ஹிந்த்” என்ற சொல்லை உலகத்துக்கு தந்தவன் செண்பகராமன்.திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் படித்தவன்.பள்ளி நாட்களிலே வருகைப்பதிவு எடுக்கும்போது “செண்பகராமன்” என்று கூப்பிட்டால் “உள்ளேன் அய்யா” என்பதற்குப்பதிலாக “ஜெய்ஹிந்த்” என்பானாம். ஒரு முறை,வங்காள விரிகுடா கடலில் “எம்டன்” என்ற கப்பலில் வந்து ”யூனியன் ஜேக்” என்று சொல்கின்ற ஆங்கிலேயர்கள் கொடி பறந்து கொண்டிருக்கும் துறைமுகத்தை நோக்கிச்சுட்டான்.அங்கு இருந்த எண்ணெய்க்கிடங்குகளெல்லாம் பல பனைமர உயரத்திற்கு எரிந்தனவாம்.செண்பகராமன் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக்கொண்டிருக்கும்போது,இவனால் உளைச்சலுக்கு ஆளான ஆங்கிலேயர்கள்,செண்பகராமன் இளைஞனாக இருக்கிறானே என்று அவனை மயக்க “மாதாஹரி” என்ற பேரழகியை அனுப்பி மயக்கச்சொன்னார்களாம் ஆங்கிலேயர்கள்.ஆனால், செண்பகராமன் எதற்கும் மசியவில்லை.தான் ஒரு மேலான இந்திய விசுவாசி என்று நிருபித்துக்காட்டினான். — மாயன் காலண்டர்படி 2012ல் உலகம் அழியும் என்னும் சந்தோஷத்தில்/பீதியில் இருப்பவர்கள் Paul Davies எழுதிய The Last Three Minutes வாங்கிப்படியுங்கள். — தன்னுடைய நெருங்கிய நண்பர்களையோ,மனைவியையோ,அப்பா,அம்மா யாரைப்பார்த்தாலும்,அதே உருவத்தில் இருக்கும் இவர்கள் வேறு நபர் என்றுத்தோன்றும்.இதற்கு Capgras Syndrome என்று பெயர்.நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பிசகினால் வருவது இது போன்ற Syndrome என்று குறிப்பிடுகிறார் டாக்டர்.V.S.Ramachandran.நம் மூளையின் செயல்பாடுகளை விளக்கி Phantoms in the Brain என்ற புத்தகம் எழுதியுள்ளார். — வாக்கிலும்,கருத்திலும் வளம் இல்லாதவன் வரதன்.ஸ்ரீரங்கம் திருக்கோவில் மடைப்பள்ளியின் சமையற்காரன்.அவன் காதலி மோகனாங்கி திருவானைக்கோவில் நர்த்தகி.அவள் விருப்பத்திற்காக வரதன் திருவானைக்கோவிலிலேயே தங்கினான்.ஒரு நாள்,கோவிலிலேயே அவன் இரவுப்பொழுதைக்கழிக்க நேர்ந்தது.அன்று அகிலாண்டேஸ்வரி தன் வாயில் குதப்பிய தாம்பூலம் அளித்து அவனைப்பெரும் கவிஞனாக ஆக்கினாள்.வரதன் காளமேகம் ஆனான்.எனவே, அவள் யாரை,எப்போது,எப்படி ஆக்குவாள் என்பதைக்கணிக்க முடியாது. இந்த வெண்பாவைப்பாருங்கள்: காக்கும் திருவானைக் காவில் திகழ்பவளின் நோக்கும்;திருவடியும்;நோன்பிரு – வாக்கும் கருத்து மிலாதவனைக் காளமேகம் என்னும் அருட்கவியாய்ச்செய்தாள் அவள். —

Advertisements