பார்மீது நான் சாகாமல் இருப்பேன் கண்டீர்

March 21, 2010

டிசம்பர் 11 – 1882 Feudalism,Modernism என்ற இரு பெரும் சகாப்தத்தின் நடுவே கொடூரமும் அன்பும் கைகோர்த்து நடந்து செல்லும் முரண்பாடு நிறைந்திருந்த மண்ணில் பிறந்தான் பாரதி. தாழ்வு மனப்பான்மையும்,அச்சமும் சூழ்ந்திருந்த நாட்டு மக்களுக்குத் தனது கவிதைகள் மூலம் விழிப்புணர்வும்,தைரியமும் ஊட்டியவன் பாரதி. டிசம்பர் 11 – 2009.இன்று பாரதியின் 127வது பிறந்த தினம்.இப்பதிவு பாரதியை நினைவு கூறுவதற்கு அல்ல.ஏனெனில்,பாரதி எனக்கு erythrocytes போன்றவன்.பாரதியைப்பற்றி சில வரிகள் மட்டும். நாம் வளர, வளர பாரதியின் கவிதை அளவும்,செரிவும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.நேற்று ஒரு பொருள் கொடுத்த கவிதை இன்று வேறு பொருளைக்கொடுக்கிறது.பாரதியின் கவிதையும் அவை தரும் உணர்வும் விவரிக்க முடியாத அதிசயம். மேலை நாட்டுக்கவிஞர்களிடமிருந்து அவன் பெற்றதெல்லாம் கவிதைக்கு அழகு சேர்த்து இருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், கவிதை வளர்ச்சிக்கு பாரதி ஊன்றிப்படித்தது தாயுமானவர்,ராமலிங்க அடிகள்,கம்பன்,வள்ளுவன் போன்றவர்களையே. பாரதியின் தத்துவ தரிசனம் ஆச்சர்யமான ஒன்று.பஞ்சபூதங்களை வணங்குவதால் வேதக்கடவுளரை வழிபடுபவனா?கிரேக்க ஹெலனிக் வழிபாட்டில் உள்ளது போல் இயற்கையை வழிபடுபவனா?.எல்லாமே நான் என்பதால் அத்வைதத்தை வழிபடுபவனா?காண்பன யாவும் உண்மை என்பதால் உலோகாயதனா? வானமாமலை சொல்வது போல்,ஒவ்வொரு மதக்கொள்கையிலும் ஒரு அகப்பை அள்ளிக்கொண்ட கூட்டுச்சரக்கு அவன் தத்துவம்.எனவே, நிவர்த்திக்க முடியாத முரண்பாடு அதில் உண்டு.ஆனாலும்,இவையனைத்தையும் நவரத்தின மாலையாக இணைக்கும் பொற்சரடு அவனுடைய மனிதத்துவம். அவனைப்பித்தன் என்று நகைத்த சமூகத்துக்கு அவனின் கவிதைகளே பதில் அல்லது கேள்வி. — ”கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும் அச்சமில்லை” என்ற வரிகளைப்படிக்கும்போது பாரதியுடன் செண்பகராமனும் ஞாபகத்துக்கு வருகிறான். “ஜெய்ஹிந்த்” என்ற சொல்லை உலகத்துக்கு தந்தவன் செண்பகராமன்.திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் படித்தவன்.பள்ளி நாட்களிலே வருகைப்பதிவு எடுக்கும்போது “செண்பகராமன்” என்று கூப்பிட்டால் “உள்ளேன் அய்யா” என்பதற்குப்பதிலாக “ஜெய்ஹிந்த்” என்பானாம். ஒரு முறை,வங்காள விரிகுடா கடலில் “எம்டன்” என்ற கப்பலில் வந்து ”யூனியன் ஜேக்” என்று சொல்கின்ற ஆங்கிலேயர்கள் கொடி பறந்து கொண்டிருக்கும் துறைமுகத்தை நோக்கிச்சுட்டான்.அங்கு இருந்த எண்ணெய்க்கிடங்குகளெல்லாம் பல பனைமர உயரத்திற்கு எரிந்தனவாம்.செண்பகராமன் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக்கொண்டிருக்கும்போது,இவனால் உளைச்சலுக்கு ஆளான ஆங்கிலேயர்கள்,செண்பகராமன் இளைஞனாக இருக்கிறானே என்று அவனை மயக்க “மாதாஹரி” என்ற பேரழகியை அனுப்பி மயக்கச்சொன்னார்களாம் ஆங்கிலேயர்கள்.ஆனால், செண்பகராமன் எதற்கும் மசியவில்லை.தான் ஒரு மேலான இந்திய விசுவாசி என்று நிருபித்துக்காட்டினான். — மாயன் காலண்டர்படி 2012ல் உலகம் அழியும் என்னும் சந்தோஷத்தில்/பீதியில் இருப்பவர்கள் Paul Davies எழுதிய The Last Three Minutes வாங்கிப்படியுங்கள். — தன்னுடைய நெருங்கிய நண்பர்களையோ,மனைவியையோ,அப்பா,அம்மா யாரைப்பார்த்தாலும்,அதே உருவத்தில் இருக்கும் இவர்கள் வேறு நபர் என்றுத்தோன்றும்.இதற்கு Capgras Syndrome என்று பெயர்.நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பிசகினால் வருவது இது போன்ற Syndrome என்று குறிப்பிடுகிறார் டாக்டர்.V.S.Ramachandran.நம் மூளையின் செயல்பாடுகளை விளக்கி Phantoms in the Brain என்ற புத்தகம் எழுதியுள்ளார். — வாக்கிலும்,கருத்திலும் வளம் இல்லாதவன் வரதன்.ஸ்ரீரங்கம் திருக்கோவில் மடைப்பள்ளியின் சமையற்காரன்.அவன் காதலி மோகனாங்கி திருவானைக்கோவில் நர்த்தகி.அவள் விருப்பத்திற்காக வரதன் திருவானைக்கோவிலிலேயே தங்கினான்.ஒரு நாள்,கோவிலிலேயே அவன் இரவுப்பொழுதைக்கழிக்க நேர்ந்தது.அன்று அகிலாண்டேஸ்வரி தன் வாயில் குதப்பிய தாம்பூலம் அளித்து அவனைப்பெரும் கவிஞனாக ஆக்கினாள்.வரதன் காளமேகம் ஆனான்.எனவே, அவள் யாரை,எப்போது,எப்படி ஆக்குவாள் என்பதைக்கணிக்க முடியாது. இந்த வெண்பாவைப்பாருங்கள்: காக்கும் திருவானைக் காவில் திகழ்பவளின் நோக்கும்;திருவடியும்;நோன்பிரு – வாக்கும் கருத்து மிலாதவனைக் காளமேகம் என்னும் அருட்கவியாய்ச்செய்தாள் அவள். —

Advertisements

காந்தி என்(னும்) ஹீரோ

September 16, 2009

சமீபத்தில் அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள ஒரு பள்ளியில் ஜனாதிபதி ஒபாமாவிடம் ”உங்களுக்கு உயிரோடு இருப்பவருடனோ அல்லது இறந்தவருடனோ உணவு அருந்த வாய்ப்பு கிடைத்தால் யாரை உணவுக்கு அழைப்பீர்கள்” என்ற கேள்விக்கு ஒபாமா அளித்த பதில்”மகாத்மா காந்தியை.பணத்தாலோ,அடக்குமுறையினாலோ மாற்றம் கொண்டுவருபவர்களை விட, சுய ஒழுக்கத்தாலும்,நன்னடத்தையினாலும் மாற்றம் கொண்டு வருபவர்களையே நான் விரும்புகிறேன்,காந்தியே என் ஹீரோ” என்று கூறினார்.

ஒபாமா, மகாத்மா காந்தியை தனது ஹீரோ என்று சொன்னதில் எந்த வியப்பும் இல்லை.உடல் பலத்தினால் எழும் ராஜ்ஜியம் அழிவுக்குட்பட்டது.ஆத்மபலத்தால் எழும் ராஜ்ஜியமே அழியாத்தன்மை பெற்றது என்பதில் தீவிர நம்பிக்கையும்.அழியாத ராஜ்ஜியத்தை உருவாக்குவதையே கொள்கையாகவும்,பாரதத்தின் சுதந்திரம் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையும் உலக அறிஞர்களை வியக்க வைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

உண்மையே கடவுள்.உண்மையையும்,பிரம்மச்சரியத்தையும் பின்பற்ற இயலாதவர்கள் மனித சேவை செய்யமுடியாது என்றார்.காந்தியடிகளைப்பற்றி போதுமான புத்தகங்களும்,பத்திகளும் இருப்பதால் இரண்டு விஷயங்கள் மட்டும்.

இவருடைய பிரம்மச்சரியத்தை சந்தேகித்து ஒருவர் அனுப்பிய கடிதத்துக்கு காந்தியடிகளின் பதில்:

“என்னுடைய அந்தரங்க வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒருவர் என்னுடைய பிரம்மச்சரிய வாழ்க்கையில் அவநம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.நான் எப்போதும் ஸ்திரீகளுடன் நெருங்கிப்பழகுகிறேன் என்றும்,அதனால் அவருக்குச் சந்தேகமாயிருக்கிறதென்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.இவரைப்போலவே இன்னும் சிலரும் என்மீது சந்தேகம் கொண்டிருகிறார்கள் என்பது தெரியும்.இச்சந்தேகத்தைப் போக்க வேண்டியது என்கடமை.கடந்த இருபது வருடங்களாக நான் பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்து வருகிறேன்.ஐம்புலன்களையும் அடக்கி வருகிறேன்.என்னுடன் எந்த நேரமும் பெண்கள் இருந்து வருவது உண்மையே.பெண்களின் அருகிலேயே இருந்தும் பிரம்மச்சரியத்தைக் காப்பதுதான் உண்மை யோகியின் லட்சணம்.இந்தப்பரிட்சையில் நான் பரிபூரண வெற்றி அடைந்திருக்கிறேன் என சத்தியமாகக் கூறுகிறேன்”.

மேலும், காந்தியடிகள் பகவத்கீதைக்கு(The Interpretations of Gita,The Gospel of Selfless Action) உரை எழுதியது அனைவரும் அறிந்ததே.காந்தியடிகள் வலியுறுத்துவது,தினமும் கீதை படியுங்கள்.கீதை,கர்மம்(Work),பக்தி(Devotion),ஞானம்(Knowledge) மூன்றைப்பற்றிய அரிய உண்மைகளை உள்ளடக்கியது.கீதையின் உண்மையான சாரத்தை அனுபவத்தில் புரிந்துகொள்ள வாழ்வில் 1.சத்தியம் 2.பிரம்மச்சரியம் 3.அஹிம்சை
4.அஸ்தேயம் 5.அபரிக்ரஹம் இவற்றை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்.

மேற்சொன்னவற்றில்,சத்தியம்(உண்மை),பிரம்மச்சரியம்(புலனடக்கம்),அஹிம்சை போன்றவற்றைப்பற்றி ஓரளவுக்குத்தெரியும்.

அஸ்தேயம் என்பது கள்ளாமை அதாவது திருடாமல் இருப்பது,பிறர் பொருளை மறைவாகக் கவராமை.இதை வள்ளுவர் இருமடிக்குற்றம் என்கிறார்.கவர்தல் ஒரு குற்றம்,மற்றொரு குற்றம் மறைவாகக்கவர்தல்.ஆகவே, இருமடிக்குற்றம்.

அபரிக்ரஹம்-அவசியமில்லா பொருள் தேவை இல்லை என்று வாழ்வது.எளிமையான வாழ்க்கையை அச்சுறுத்த ஏற்பட்டது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறார்.

“நாளைக்கென்று எதையும் தேடிவைக்க எனக்கு ஒரு நாளும் இயலுவதில்லை.ஒருநாள் சம்புமாலிக் எனக்கு வயிற்றுவலி வந்தபோது சிறிது அபினி சாப்பிடும்படி சொல்லி அதை என்னிடம் கொடுத்து அனுப்ப முயன்றார்.அதை ஏற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை.என் மேல்வேஷ்டியின் ஒரு மூலையில் அவர் அதை முடித்துவிட்டு ‘இது பத்திரமாக உங்களிடம் இருக்கட்டும்’ தேவையேற்படும்போது மருந்தாக இதில் சிறிது அருந்தலாம் என்றார்.ஆனால், அந்த முடிச்சுடன் நான் வெளியே வந்த போது வெளி வாயிலுக்குள்ளேயே வழி தெரியாதவனாக இங்குமங்கும் நடந்து திரிந்தேன்.அபினியை அவிழ்த்தெடுத்து வெளியே எறிந்துவிட்ட பிறகு எனக்கு எல்லாம் ஒழுங்காய்விட்டது.கோயிலுக்குத்திரும்பி விட்டேன்.”.

மேலே ராமகிருஷ்ணர் சொன்ன கதை அபரிக்ரஹத்துக்கு ஒரு உதாரணம்.

——–

காளிதாசன் ரிதுசம்ஹாரம் என்னும் நூலை எழுதியிருக்கிறார்.இந்தியாவின் ஆறு பருவங்களான கார்,கூதிர்,முன்பனி,பின்பனி,இளவேனில்,முதுவேனில் இவற்றை மையப்படுத்தி,ஒவ்வொரு பருவத்துக்கும் குறிப்பிட்ட கவிதைகள் எழுதியுள்ளார்.இந்தக் கவிதைகளின் சில மொழிபெயர்ப்புகள் படிக்கக்கிடைத்தது.அவற்றில் சில:

1) Coming home in a rage,he sees
the sampige tree outside in bloom.

2) white birds cast black shadows
bird and shadow running together.

3) White Shadows of white birds on
Water,and a head with a yellow beak.

கீழே கொடுக்கப்பட்ட கவிதை காளிதாசனுடையது அல்ல.
On the bathroom sink
The Full set of Teeth
smiled at me generously.
——

ஆரம்பமா?முடிவா?

August 9, 2009

”மன்னிக்கவும்,இது கதையின் ஆரம்பமல்ல”

1965ல் வெளியான இந்தக்கதையின் சிறப்பு,கதையின் ஆரம்ப வரிகள்,இறுதி வரியின் தொடர்ச்சியாக அமைந்து கதைக்குள்ளே மறுபடி மறுபடி இழுத்துச்செல்லும். அதாவது,ஆரம்பமும்,முடிவும் வரையறுக்கப்படாத ஒரு Infinite Loop கதை.எழுதப்பட்ட வரிகளுக்குள்ளேயே கதை திரும்பத் திரும்பச்சுழலும்.

சிறுவயதில் Oncemore,Nomore என்ற இரண்டு பறவைகளின் கதையைக்கேள்விப்பட்டிருக்கிறீர்கள்(விவேக் கூட ஒரு சினிமாவில் இதை உபயோகப்படுத்தியிருப்பார்).Oncemore,Nomore என்ற இரண்டு கிளிகளுக்குள்ளே அத்யந்தமான நட்பு.ஒருநாள், Nomore கிளி திடீரென இறந்துவிடும்.இப்போது உயிரோடு இருக்கும் கிளியின் பேரென்ன என்ற கேள்விக்கு Oncemore என்று பதிலளித்தால் திரும்பவும் முதல் வரியிலிருந்து கதை சொல்லப்படும்(நீங்கள் சுதாரித்துக்கொள்ளும் வரை).

இந்த ரகக்கதையே மேலே சொன்னப்பட்ட “மன்னிக்கவும், இது கதையின் ஆரம்பமல்ல”. இதைப்படிப்பவர்களுக்கு, பிரபல டாக்கியான் இயந்திர கதையும் நினைவுக்கு வரலாம்.

விந்தனின் “கதவு திறந்தது” கதையை சற்று திருத்தினால் மேலே சொன்ன விதிகளுக்கு உட்படும் மற்றொரு கதையாக கண்டிப்பாக மாற்றலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த உரையாடலும் அந்த வகையைச்சேர்ந்ததே.

Wife makes call to Husband: For a week my boss and I will be going to bangalore for a meeting, you look after yourself.

Husband makes call to secret lover: ”My wife is going to bangalore for a week, so lets spend the week together”.

Secret lover makes call to a small boy whom she is giving private tution: “I have work for a week, so you need not come for the class”.

Small boy makes call to his grandfather: “Grandpa, for a week I don’t have class ‘coz my teacher is busy. Lets spend the week together.

Grandpa(the boss) makes call to his secretary: This week I am spending my time with my grandson. We cannot attend the meeting.

Secretary makes call to her husband: This week my boss has some work, we cancelled our trip.

Husband makes call to secret lover: We cannot spend this week together, my wife has cancelled her trip.

Secret lover makes call to small boy whom she is giving private tution: This week we will have class as usual.

Small boy makes call to his grandfather: “Grandpa, my teacher said this week I have to attend class. Sorry I can’t give you company”.

Grandpa make call to his secretary: “This week we will attend the meeting in bangalore, so make arrangements”.

இதே போன்று, நம் சுஜாதாவும் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார்.அந்தக்கதையின் தலைப்பு என்ன தெரியுமா?

—–

டைப்ரைட்டரின் விசைப்பலகை(Key Board) தற்போதைய வடிவில் அமைந்ததன் காரணம் என்ன?

டைப்ரைட்டரின் விசைப்பலகை(Keyboard) ஆரம்ப காலங்களில் பியானோவின் வடிவத்தையே ஒத்து இருந்தது.அதே போல், விசைப்பலகையில் இருக்கும் விசைகள் Alphabetical Arrangementலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. பெருவாரியான டைப்ரைட்டர்களுக்கு எட்டிலிருந்து பத்து வரிசைகள் வரை விசைகள் உண்டு. Capital Lettersக்கும் தனித்தனி விசைகள் தேவைப்பட்டதால் இந்த பிரச்சனை (இதெல்லாம் Shift Key கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னால்).

கிறிஸ்டோபர் லாத்தம் ஷோல்ஸ்(Christopher Latham Sholes) என்ற அமெரிக்கரே 1873ல் முதல் Production Typewriterஐக் கண்டுபிடித்தார். இந்த டைப்ரைட்டர்களிலும், விசைகள் Alphabetical Arrangementல் இருந்ததால், வேகமாக டைப் செய்யும்போது, ஒரு விசை மற்றொரு விசையுடன் Jam ஆனது. இதைத் தவிர்க்க ஷோல்ஸ் யோசிக்கும்போது, அதிகமாகப் பிரயோகப்படும் விசைகள் எதிர் எதிர் வரிசையில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.இந்த லாஜிக்கில் உருவானதே தற்போது நாம் உபயோகிக்கும் QWERTY கீ போர்ட்.

தற்போது Dvorak போன்ற கீ போர்ட்கள் இன்னும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், Dvorak கீ போர்ட்களால் நூறாண்டுகளுக்கு மேல் உபயோகப்பட்டுக் கொண்டிருக்கும் QWERTY கீ போர்ட் இடம் பெயருமா என்பது சந்தேகமே.

—–

த்தியை முடிக்கும் முன் ”இசைஞானி” இளையராஜா எழுதிய ஒரு வெண்பா:

காலறிவும் இல்லார்கள் காலத்தால் கற்றறிவால்
ஞாலத்தைத் தாம்அளந்து நம்புகின்றார்! – காலமிலா
வாலறிவை நூலென்னும் கோலளக்கா! – பேரறிவில்
நூலறிவும் நூலளவே நோக்கு!.

இதன் பொருள், நூலால் கற்றறிந்ததை வைத்து அண்ட சராசரங்களை அளக்கலாம்.இறைவன் என்னும் தூய அறிவை நூலறிவால் அளக்க இயலாது.ஏனெனில், நூலறிவு நூல் அளவை விட மெல்லியது. எல்லோருடைய கற்றறிந்த அறிவை ஒன்றாக்கினாலும் கூட அது இறைவனை முற்றும் உணரப் புல் நுனி அளவு கூட ஆகாது.

இரண்டு புத்தகங்கள்

July 25, 2009

நான் சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் முக்கியமாகக் கருதும் இரண்டு புத்தகங்களைப் பற்றிய குறிப்புகளை இங்கே தர விரும்புகிறேன்.

1. மிதமான காற்றும் இசைவான கடலலையும்
2. எனது நாடக வாழ்க்கை

1. மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய 32 சிறுகதைகளின் தொகுப்பு மிதமான காற்றும் இசைவான கடலலையும் என்னும் புத்தகம்.வெயிலோடு போய்,அப்பாவின் பிள்ளை,குதிரை வண்டியில் வந்தவன்,ஏவாளின் குற்றச்சாட்டுக்கள் போன்ற கதைகள் மிகவும் ரசிக்க வைக்கின்றன.இத்தொகுப்பின் முதல் கதையான பாவனைகள் கீழ்க்கண்டவாறு ஆரம்பிக்கிறது.

                        “குதிகாலிட்டு உட்கார்ந்தான்.சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தான்.ஒரு காலை சப்பணமிட்டு ஒரு காலை நீட்டி இப்படியும், அப்படியுமாய் உட்கார்ந்து பார்த்தான்.ம்கூம்,எப்படி உட்கார்ந்தாலும் பசித்தது”.

மேலே சொன்ன வரிகளை படித்தவுடன் ஒரு சிறிய ஆச்சரியம் மேலோங்கி,முதல் வரிகளிலேயே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி,படிப்பவர்களை கதைக்குள்ளே இழுத்து, அடுத்த வரிகளிலேயே அந்த எதிர்பார்ப்பை அநாயாசாமாக உடைக்கும் தந்திரம் பிடித்திருந்தது. இக்காரணத்தால் மிகுந்த எதிர்பார்ப்புடன் 32 கதைகளையும் படித்தேன்.படித்து முடித்தவுடன் தோன்றிய உணர்வு நிஜமாகவே மிதமான காற்று வருடுவது போல் இருந்தது.

மிக யதார்த்தமான கதை மாந்தர்கள்,சுவாரசியமாய் கதை சொல்லும் திறன்,இவற்றை வெற்றிகரமாக இணைக்கும் எழுத்து நடை எனப் பல வரிகளில்,பல கதைகளில் வியக்க வைக்கிறார் தமிழ்ச்செல்வன்.

இந்த புத்தகத்தை படித்து ரசித்து முடித்த கையோடு, தமிழ்ச்செல்வனின் இன்னொரு புத்தகமான “பேசாத பேச்செல்லாம்” வாங்கி உள்ளேன். இப்புத்தகத்தைப்பற்றி வேறொரு தருணத்தில்.

2.எனது நாடக வாழ்க்கை – அவ்வை.தி.க.ஷண்முகம்

       அவ்வை.தி.க.ஷண்முகம் அவர்கள் தனது நாடக வாழ்க்கையைப்பற்றி எழுதியுள்ள புத்தகம்.இதுவரை, நாடகத்துறையில் பங்காற்றிய எவரேனும், இது போன்று எழுதி உள்ளனரா என்று தெரியவில்லை.நாடக வாழ்க்கையில் அடி எடுத்து வைத்ததிலிருந்து ஆரம்பித்து,தான் எதிர் நோக்கிய பிரச்சனைகள்,நாடகம் நடத்தும்போது நடந்த சுவையான சம்பவங்கள்,தனது சக நாடகக்கலைஞர்களைப்பற்றிய குறிப்புகள் என அருமையான அனுபவப்பகிர்வுகளை உள்ளடக்கியது இப்புத்தகம். அந்தக்காலத்தில்,ஆண்களே பெண்கள் வேடம் பூண்டனர் என்பதைப்படிக்கும்போது வியப்பாக இருந்தது.அதேபோல,கலைவாணர் N.S.கிருஷ்ணன்,M.R.ராதா போன்ற பிரபலங்கள் அவ்வை.ஷண்முகம் அவர்களின் நாடகக்கம்பெனியில் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.கலைவாணர் நடிப்பில் மட்டுமின்றி மிருதங்கம்,பாடல்கள்,ஆர்மோனியம்,ஓவியம் எனப்பல கலைகளில் வித்தகராகத்திகழ்ந்தார் போன்ற உபரிக்குறிப்புகள் பல உள்ளன.

இந்தப்புத்தகத்தில் நான் வியந்த விஷயங்கள் இரண்டு.

1.அவ்வை.ஷண்முகம் அவர்களின் தமிழ்ப்பற்று மற்றும் குருபக்தி.
2. ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கு இணையாக கடைசிப்பக்கம் வரையில் அலுக்க வைக்காத அந்த எழுத்து நடை.

இந்தக்காரணம்தான், புத்தகம் படித்து முடித்தவுடன் ஒரு நாடகக் கம்பெனியுடன் காரில் ஒரு சுற்றுலா போய் வந்த உணர்வை ஏற்படுத்துகிறது.இதே போன்று சுற்றுலா உணர்வை படித்தவுடன் ஏற்படுத்திய மற்றொரு புத்தகம் தி.ஜா எழுதிய நடந்தாய் வாழி காவிரி.

                                                                                                        
சிலப்பதிகாரம் புகார்க்காண்டத்தில் அரங்கேற்றுக்காதையில் கீழ்க்கண்ட பாடல் வருகிறது.
 
                     இருவகைக்  கூத்தின் இலக்கணம் அறிந்து
                     பலவகைக் கூத்தும் விலக்கினில் புணர்த்துப்
                     பதினோர் ஆடலும்,பாட்டும்,கொட்டும்,
                     விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து ஆங்கு

இப்பாடலுக்கான அடியார்க்கு நல்லார் உரையில் உரை முடிந்தவுடன் “அகத்தெழு சுவையா னகமெனப் படுமே என்றார் சயந்தநூ லுடையாருமெனக்கொள்க” என்று எழுதுகிறார்.

இதில் குறிப்பிட்டுள்ள சயந்த நூல் ஒரு நாடகத் தமிழ் நூல் எனத்தெரிகிறது. இந்நூல் அல்லது இந்நூலைப்பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் உள்ளனவா என்று தெரிந்து கொள்ள ஆவல்.யாராவது தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.

ப்பத்தியை முடிக்கும்முன், பசவண்ணா எழுதிய ஒரு பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே:

                         Certain Gods
                         always stand watch
                         at the doors of people.
                         Some will not go if you ask them to go.
                         Worse than dogs, some others.
                         What can they give,
                         these gods,
                         who live off the charity of people,
                         O lord of the meeting rivers!

இப்பாடலில் இருக்கும் புத்திசாலித்தனம் புரிகிறதா!!!

புதுக்கவிதை

May 24, 2009
தமிழ்ப் புதுக்கவிதைகளுடனான எனது பரிச்சயம் மிகக்குறைவே.கட்டுரைகளையும்,கதைகளையும் படித்த அளவு(கூட) புதுக்கவிதைகள் படித்ததில்லை.என்னிடம் இருக்கும் கவிதைத்தொகுப்புகள் கனிமொழி,
Font sizeல்யாண்ஜி,கலைஞர்,சுகிர்தராணி மற்றும் ராமானுஜன் போன்றவை மட்டுமே.

ஆனால்,
இது உடலா? என் மனமா?
ஆண்டவன் பாதம் நோக்கி உதிர்ந்து கொண்டிருக்கும் மலரா?
மலரின் இதழா?
இதழ்மேல் பதிந்த கைவிரல் ரேகையா?
ரேகையினின்று கமழும் மலரின் மணமா?
போன்ற கவித்துவமான வரிகளை நாவல்களில் வாசித்ததுண்டு.

மற்றபடி, மிகுந்த ஈடுபாட்டுடன் வாங்கிப் படித்ததில்லை.இணையத்தில் சில சமயம் படித்ததுண்டு.

புதுக்கவிதை மேல் ஈடுபாடு இல்லாததற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு.

1.மரபுக்கவிதை போல் புதுக்கவிதைக்கு இலக்கண வரையறைகள் தேவையில்லை.எனவே, கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்.இவர்களிலிருந்து, நல்ல கவிதைகளைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகக் கடினம்.10 புத்தகங்கள் வாங்கினால், 2 நல்ல தொகுப்புகள் தேரலாம்.எனவே, Trial and Error ஆய்வுக்கு உட்பட மனம் மறுக்கிறது.

2.ஒரு வாக்கியத்தை நான்கு வரிகளாக உடைத்தால் புதுக்கவிதை என்ற மனோபாவத்திலேயே பெரும்பாலான புதுக்கவிதைகள் எழுதப்படுகிறது என்பது என் நம்பிக்கை.

உண்மையான கவிதைக்கு இதயத்தில் சற்று இரத்தக்கசிவு வேண்டும் என்பார்கள்.அதுபோல,கவிதை ஒரு ஆதார உணர்ச்சியுடன் எழுதப்பட வேண்டும் என்பதும்,சொல்ல வந்த உணர்ச்சி கவிதை மூலம் சரியாக உணர்த்தப்பட வேண்டும் என்பது என் அபிப்ராயம்.

இந்நிலையில் ஆத்மாநாமின் கவிதைத் தொகுப்பைப்படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட அற்புதமான கவிதைகளின் தொகுப்பு.ஆத்மாநாம், தன் கவிதைகளில் எடுத்தாளும் களங்கள் சந்தேகமின்றி ஆச்சர்யம் மிகுந்தவை. கட்டுக்கோப்பான வார்த்தைகள், மனதைப்பிசையும் வரிகள் என அவரின் கவிதைகள் ஒரு அபூர்வம். இத்தொகுப்பில் அற்புதமாக எனக்குப்பட்ட கவிதை

2083 ஆகஸ்ட் 11

என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்
கவிதை ஆரம்பம்
ஞானக்கூத்தனைக் கேட்டேன்
இன்னும் இங்கேவா இருக்கிறோம்
அவர்
சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது
என்றார்
என்ன இது வினோதம்
இருந்த இடத்திலேயே இருப்பது
என்றேன்
இருப்பதை உணர்வதை வாழ்க்கை
என்றார்
நகுலன் எங்கே என்றேன்
நவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார்
என்றார்
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன்

என்றார்
நன்றி என்றேன்
அப்பொழுதுதான்
ஒரு அணுகுண்டு வெடித்த
சப்தம் கேட்டது
இருவரும்
அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம்.

மற்றொரு ஆச்சரியம், A.K.Ramanujan ஆத்மாநாமைப் பற்றி எழுதியிருக்கும் ஓர் ஆங்கிலக்கவிதை.ராமானுஜத்தின் இக்கவிதையைப் புரிந்து கொள்ள ஆத்மாநாமைப் பற்றிய கீழ்க்கண்ட குறிப்புகள் உதவும் என நம்புகிறேன்.

ஆத்மாநாம் Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.மூளையின் தீவிர இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க Lithium,Hyportrym,Largatyl,Fenergon போன்ற மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டியிருந்தது.ஒரு சமயத்தில் இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.காப்பாற்றப்பட்டார்.
அச்சமயத்தில் அவர் இடைவிடாது படித்துக் கொண்டிருந்த புத்தகம் A.K.Ramanjuanன் The Speaking of Siva.
இப்போது, ராமானுஜத்தின் ஆத்மாநாமைப் பற்றிய கவிதை.கவிதையின் தலைப்பு He to Me or Me to Him.
When I was translating
twenty years ago
the saints who sang
ten centuries ago about siva
without any thought of me

I didnt have any
thought of a young man
in Madras ten years ago
who would read them

through my words
night and day
his hand toying with pills
his eyes with colours
turning on wheel

swallowing them
with the poems
that had no thought
of him or me who had

no thought of him
gasping in the mist
between day and the needles
in the wrist between
to be or not to be

leaving behing poems
for me to read
and to translate this week
without a thought
of him who had thought

of me and the saints
who spoke through me
to him yet had told him
nothing nothing at all.

இக்கவிதை எழுதப்பட்ட ஆண்டு 1991.ஆத்மாநாம் இறந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு.இக்கவிதைக்குக்கீழேஎனக்கும் ஆத்மாநாமுக்கும் இடையே ஏதோ ஒரு விவரிக்க இயலாத தொடர்பு உள்ளதுஎன ராமானுஜன் குறிப்பிட்டுள்ளார்.

குறுந்தொகை மற்றும் சில சங்கப் பாடல்களையும் மொழிபெயர்த்துள்ள ராமானுஜன் ஆத்மாநாமின் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனுதர்மமும் மனிததர்மமும்

April 12, 2009

“Writing the beginning of anything is as difficult as finding out the origin of the universe” என்ற Robert Mccrumன் வரிகளை இப்பத்தியை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற குழப்பத்திற்கு நடுவே நினைவு கூர்ந்தேன். கிட்டத்தட்ட 50 நிமிட யோசிப்புகளுக்கு பிறகு இவ்வாறு ஆரம்பிக்கிறேன்.

இன்றைய Pizza,Pub,Dating மற்றும் இன்னபிற கடன்வாங்கிய கலாச்சாரங்களை உட்கொண்டு நாம் ஒழுக்கமாக வாழும் முறைமையிலிருந்து பிறழ்ந்து விட்டோமோ என்ற கேள்வி பலமுறை எழுந்ததுண்டு.இவ்வாறு எழும்போதெல்லாம் எது சரி,எது தவறு என்று தீர்மானிக்கும் காரணிகள் ஒவ்வொரு மனிதனிடமும் வேறுபடும் என்று ஆறுதல் சொல்லிக்கொள்வதுண்டு.

ஏனெனில்,

 “ந தர்மா தர்மௌ க்ரத ஆவம் ஸ்வ இதி

   ந தேவகந்தர்வா ந பிதர இதி

  ஆஸக்ஸதே யம் தர்மோ யம் அதர்மோ இதி”

 அதாவது, சரி(தர்மம்) அல்லது தவறு(அதர்மம்) இவ்விரண்டும் இதுதான் நாங்கள் என்று சொல்லிக்கொள்ள இயலாது.முன்னோர்களாலும்,கடவுளர்களாலும் கூட சரி எது,தவறு எது என்பதை நிர்ணயிக்க இயலாது என்ற ஆபஸ்தம்ப சூத்திரத்தின் வரிகள் நான் சொல்வதை அங்கீகரிக்கிறது என்ற அகம்பாவம்.

 இவ்வாறிருக்க, காஞ்சி மகாபெரியவர், நாம் வாழ்வில் எப்படி நடக்க வேண்டும் என்று புராணங்களில் கூறியுள்ளன, வாழ்வின் ஏதோ ஒரு காலகட்டத்தில் இப்படி நடந்து கொள்ளலாமா அல்லது இதைச் செய்யலாமா என்று கேள்வி எழும்போது,அக்கேள்விகளுக்கு புராணங்களில் பதில் தேடவேண்டும்.புராணங்களில் பதிலில்லையெனில்,மனுதர்மத்தில் சொல்லியிருக்கும்படி நடக்கவேண்டும் என்று சொன்னதைப் படிக்கும்போது,மேற்சொன்ன அகம்பாவம், ஆற்றில் எரிந்த தீக்குச்சிப் போல் அணைந்துபோனது.

 சரி, இவ்வளவு பீடிகை எதற்கு? மனுதர்மத்தைப் பற்றிக் கதைக்கவே.

 சுமார் 2685 verses கொண்ட மனுதர்மம் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் நடந்து கொள்ள வேண்டிய விதிகளை,வழிமுறைகளை வலியுறுத்துகின்றன.ஆணுக்கும், பெண்ணுக்குமான சமூக உறவு,பிறப்பு,இறப்பு,மறுபிறவி என வாழ்வின் எல்லா நியமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இப்படிப்பட்ட மனு சொல்லியிருக்கும் தர்மங்களை,இனி வரவிருக்கும் ஒவ்வொரு பத்தியின் முடிவிலும்,ஒன்று அல்லது இரண்டு மனுவிதிகளை குறிப்பிட விருப்பம்.

மனுதர்மத்தை ஒரு மததர்மம் என்று கொள்வது தகாது.இது ஒட்டுமொத்த மனிததர்மம் என்பது என் கருத்து.காரணம், “அவரவர் இறையவர் குறைவிலர்” என்ற பிரபந்த வரிகள் வலியுறுத்துவதையே,”We believe in that which has been bestowed from high upon us, as well as that which has been bestowed upon you, for our god and your god is one and the same” என்ற குர் ஆனின் வரிகளும் வலியுறுத்துகின்றன.சற்று ஆழமாக யோசித்தால்,இவ்விரண்டும் போதிப்பது ஒரு விதமான சுய ஒழுக்கத்தையேயாகும்.அதேபோன்று, சொர்க்கம்,நரகம் மற்றும் Judgement Day போன்றவையும் வாழ்வில் நல்லொழுக்கத்தைப் பின்பற்றுதலின் அத்தியாவசியத்தையே பறைசாற்றுகின்றன.இவ்வாறு வாழும் முறைமை எல்லா சமயத்தினருக்கும் பொது.அவற்றையே மனுதர்மம் எடுத்துரைக்கின்றது.

 மேற்சொன்ன வாக்கியங்கள் கண்டணங்களிலிருந்து தப்பித்தலுக்கான வாக்கியங்கள் என்று தோன்றினால் அது ஒரு வகையில் உண்மையே.ஏனெனில், பாரதி போன்ற நாடுபோற்றும் கவியை மதவாதி என்று பிதற்றித்திரியும் அறிஞர்கள் வாழும் சூழலில் நானும் வாழ்கிறேன் என்ற பிரக்ஞையின் மேலோங்களே இதற்குக் காரணம். மனுதர்மத்தை இனிவரும் பத்திகளில் குறிப்பிடவேண்டும் என்று பணித்ததன் காரணங்கள் கீழ்க்கண்டவை

1. இன்னும் 5 அல்லது 6 தலைமுறைகளுக்குப் பிறகு மனுதர்மம் போன்ற புத்தகங்கள் ஜீவித்திருக்குமா என்பது பெரிய கேள்விக்குறியே.இன்றும், சுஜாதா இல்லையெனில், குறுந்தொகை,புறநானூறு மற்றும் இன்னபிற சங்க இலக்கியங்கள் நம்மை இந்த அளவுக்கு அடைந்திருக்குமா என்பது சந்தேகமே.

 மேற்சொன்ன காரணத்தை Literal-ஆக எடுத்துக்கொண்டு, சுஜாதா செய்ததை நீ செய்து கிழிக்கபோகிறாயா என்ற வாதத்துக்கு வரவேண்டாம், நான் மேலே சொல்ல வந்த Point அதுவல்ல.

2. இணையத்தில் பதிதலின் இன்னொரு முக்கிய நன்மை, ஒருவேளை, Dystopic Science Fiction-ன் கரு போல,நாளை எல்லா புத்தகங்களும் எரிந்து போகும் நிலை ஏற்பட்டாலும், இணையம் நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையும், இணையத்தின் சாசுவதத்தின் மேல் உள்ள நம்பிக்கையும்.

3. ஆத்திசூடி,வந்தே மாதரம் போன்றவற்றை டிரம்ஸ் சத்தங்களினூடே மட்டுமே கேட்கத்தயாராயிருக்கும் அவலம் தமிழ்ச்சமூகத்திற்கு மட்டுமே உரியது.இவ்வாறிருக்க, இதுபோன்ற புத்தகங்களின் நிலைத்ததன்மை மிகவும் யோசிக்க வைக்கிறது.

இவைதான் முக்கியக்காரணங்களே தவிர, சமூகத்தைத் தனியாளாகத் திருத்த வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான நோக்கமன்று. இன்று சீரழிந்துவரும் கலாச்சார சூழலில் இவ்விதிகள் ஒரு வேகத்தடை போன்று உபயோகப்பட்டால் ஒரு ஒட்டுமொத்த சீரழிவிலிருந்து மீளமுடியும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்ராயம்.மாற்றம் என்பது மானிட இயல்பு,இதெல்லாம் பழமைவாத சிந்தனை என்று சொல்பவர்களைப்பற்றிய அக்கறை எனக்கு இல்லை.

”You are the Creator of your own Destiny” என்ற நரேந்திரநாத்தின் வரிகளிலும், இனியொரு விதி செய்வோம் என்ற பாரதியின் வரிகளிலும் எனக்கு எப்போதும் நம்பிக்கையுண்டு.அந்த நம்பிக்கை கொடுக்கும் தைரியத்துடன் இனிவரும் பத்திகளின் கடைசியில் மனுதர்மத்தில் சொல்லியிருக்கும் விதிகளை அப்படியே எழுதுகிறேன்.

கமல்ஹாசனும் விமர்சனங்களும்

April 5, 2009

 

சமீபகாலமாக தசாவதாரத்தின் மீதான விமர்சனங்களும்,கமலுக்கு ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதில் ஆற்றாமை போன்ற சாடல்களும் ஓய்ந்திருக்கும் வேளையில் இன்று தொலைக்காட்சியில் கமல்ஹாசனின் பேட்டி ஒளிபரப்பானது.

 

இப்பேட்டியில் கமல்ஹாசன் தன் சினிமா மீதான விமர்சனங்களுக்குத் தந்த பதில்கள் மிகவும் Logicalஆகத் தோன்றியது. குறிப்பாக, பேட்டியாளர் கமல்ஹாசனின் சினிமா மீதான உள்ள Negative Criticisms பற்றி கேட்ட பொழுது

“There are honest criticisms which I really value, but there are some critics who try to prove their intelligence.When they try to prove their Intelligence, let them” என்றார். இதைக்கேட்டபோது, இது கமலின் படைப்புகளுக்கு மட்டும் அல்லாது பொதுவாக தமிழ்ச் சமூகத்தின் விமர்சன சூழலின் நிலையும் இதுவே என்று தோன்றியது. கண்ணாடியே தன்னை விமர்சிக்கும் சிறந்த விமர்சகர் என்றார்.

 

கமல் தன் மீதும், தன் படைப்புகளின் மீதும் வீசப்படும் விமர்சனங்களின் நேர்மையையும், விமர்சகர்களின் நேர்மையையும் சரியாக புரிந்து வைத்திருக்கிறார் என்பது உறுதி. நேர்மையற்ற விமர்சனம் முயற்சியைத் தடைப்படுத்த இடம் தராமல்,ஒரு படைப்பாளி தன் படைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இப்புரிதல் மிகவும் அவசியம். இப்புரிதலின் விளைவே அன்பே சிவம்,ஹே ராம்,மகாநதி போன்ற சோதனை படைப்புகள் என்பது என் எண்ணம்.

 

“I Prefer honesty and always want to be a honest man” என்று சொல்லி, honestஆன வாழ்க்கை நடத்தல் மூலம் வெவ்வேறு காலகட்டங்களில் என்னை நானே முரண்பாட்டிற்க்குட்படுத்தவேண்டிய சங்கடம் இல்லை என்றார். கமல்ஹாசனைப் பொறுத்தவரை இது ஒரு போலித்தனமில்லாத வாக்கியங்களாகவே நினைக்கிறேன்.ஒரு உதாரணம்,2007ம் ஆண்டு கமல்ஹாசன் அளித்த ஒரு பேட்டியில்,ஆஸ்கர் அமெரிக்கத்தரத்திற்கான ஒரு உயரிய விருதேயன்றி,அதுவே உலகத்தரமாகாது என்று சொன்னபோது, பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்,இன்றும் கமல் அதே வாக்கியங்களைச் சொல்லும்போது ஆற்றாமை என்று சாடுவதில் உள்ள நியாயம் புலப்படவில்லை.

 

நேர்மையற்ற விமர்சனங்கள்/விமர்சகர்கள் மீது கோபம் வருவதில்லையா எனப் பேட்டியாளர் கேட்டபோது,முதலில் கோபம் வந்தாலும், There are kids who wet their pants in the bed, அம்மா அவர்கள் மீது கோபம் அடைவதில்லை.அதே போன்று, there are people who cannot limit their tongue, அனுபவம் அவர்களை மாற்றிவிடும் என்று கமல் சொல்லும்போது, இன்று பரவியிருக்கும் தொட்டாசிணுங்கி சூழலில்,ஒரு சீனியர் கலைஞனின் நாகரிகமான பேச்சு சந்தோஷப்படவைத்தது.

 

இப்பேட்டியில், நான் ரசித்த மற்றொரு விஷயம், கமலின் வெளிப்படையான அபிப்ராயங்கள்.எந்த தனிநபர் மீதும்,முக்கியமாக, நேர்மையற்ற விமர்சகர்கள் பற்றி கூறும்போதுகூட பொதுப்படையாக,காழ்ப்புணர்ச்சியின்றி,பண்பட்ட வார்த்தைப் பிரயோகங்களே செய்தார். இந்த மனோபக்குவம் எந்தவொரு படைப்பாளிக்கும் அவசியம் என்பது என் அபிப்ராயம்.

 

 

கமல்ஹாசன் என்ற மிகச்சிறந்த Establishmentன் நீண்ட நாளைய வெற்றிக்கு இம்மனோபக்குவமும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

வள்ளுவன்

April 4, 2009

நான் தொலைக்காட்சியில் விரும்பிப்பார்க்கும் வெகுசில சினிமா சாரா  நிகழ்ச்சிகளில் “எங்கே பிராமணன்” தொடரும் ஒன்று. தொடரின் நடுவே சோ தரும் இந்துமதம் சார்ந்த விளக்கங்களும்,கீதையின் ஸ்லோகங்களும், புராணங்களிலிருந்து தரும் சுவையான கதைகளும் சோவின் மேதைமைக்குச் சான்றுகள்.

சென்ற வார Episodeல், ஒரு சில குறள்களை மேற்கோள் காட்டியும், வள்ளுவர் ஜைனன் என்ற வாதம் போலியானது, அவர் இந்துவே என்ற பொருளிலும் சோ பேசியது ஒளிபரப்பானது.

உலகியல் இனிமையாக நடைபெறவும்,ஒழுக்கம்,ஆசையை ஒழித்தல் போன்ற உலக தத்துவங்களை குறளின் மூலம் போதிக்கும் வள்ளுவன் இம்மதத்தைச் சார்ந்தவர் என்ற அடைப்புக்குள் கொண்டு வர முயல்வது தவறு என்றே தோன்றுகிறது.

ஏன் தவறு என்ற காரணங்களை முன்வைத்து,விவாதங்களை எதிர்நோக்கி,பதிலளித்து ஒரு Sumo Wrestling மேடையை உருவாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அவ்வளவே.மாறாக, வள்ளுவனைப்பற்றி எழுதக்கிடைத்த சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொள்வதே சரி என்று நினைக்கிறேன்.

வள்ளுவன் என்ற சொல்லுக்கு அரசனின் கட்டளையைப் பறையறைந்து அறிவிப்பவன் என்று பொருள். இதற்கும் வள்ளுவன் பெயருக்கும் சம்பந்தம் உள்ளதா அல்லது இது ஒரு Mere co-incidenceஆ என்பது ஆராய்ச்சிக்குரியது.

நான் வள்ளுவன்பால்  ஈடுபாடு கொள்ள முக்கிய காரணங்கள், உயர் கருத்துக்களை ஏழே வார்த்தைகளில் சொல்ல முடிந்த Communication Skill மற்றும் மொழியின் ஆளுமை.

”ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு” (குறள் 190)
என்ற அறத்துப்பால் குறளிலும்

“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு”  (குறள் 383)
என்ற பொருட்பால் குறளிலும்

“தஞ்சம் தமரல்லர் ஏதிலர் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி” (குறள் 1300)
என்ற இன்பத்துப்பால் குறளிலும் உள்ள கருத்து எந்நாட்டவர்க்கும்,எக்காலத்திற்கும் பொருந்தும் தன்மை வாய்ந்தவை.

வள்ளுவன் எந்த சமயத்தையும் தழுவாது எல்லா சமயத்துக்கும் பொருந்தும்படியே எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவேதான், திருக்குறள் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது.

இதையே, மாமூலர் திருவள்ளுவமாலையில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

“ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப ஆறு சமயத்தார்-நன்றென
எப்பா வலரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி”.

அதாவது, திருக்குறள் தமிழ்நாட்டிற்க்கு மட்டுமின்றி உலக முழுமைக்கும் பொருந்தும் என்ற பொருளில் பாடுகிறார் மாமூலர்.

உலகில் எந்த சமயத்துக்கும்,எந்த நாட்டினர்க்கும் பொருந்தும் கருத்துக்களை உள்ளடக்கிய நூலை வள்ளுவன் இயற்றிய காரணத்துக்காகவே, பாரதி ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கண்ட தமிழ்நாடு” என்று மார்தட்டுகின்றான்.

தமிழ்ச்சொல்

March 4, 2009

”நான்கு வேதங்களும் பத்து உபநிஷதங்களும்” என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கும்போது,வேதம் என்ற நேரடியான வார்த்தையைத் தவிர்த்து, இதே அர்த்தத்தில் உள்ள பிற சொற்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட,தேடினேன்.சில சொற்கள் அகப்பட்டன. இச்சொற்கள், இச்சொற்களை உட்கொண்ட சில வரிகள், இவ்வரிகளின் மேலோட்டமான அர்த்தம்,இவற்றைப் பற்றியே இப்பத்தி.

”அந்தணரோத்துடைமை மிகவினிதே” என்று இனியவை நாற்பதில்,அந்தணர் வேதத்தை மறவாமை இனிது எனும் அர்த்தத்திலும்,

 “வாங்கின்னா ஒத்திலாப் பார்ப்பானுரை” என்று இன்னா நாற்பதில், வேதம் ஓதுதல் இல்லாத அந்தணன் சொல் துன்பம் எனும் அர்த்தத்திலும்,

 ”ஒத்தொடு புணர்ந்த காப்புடை ஒழுக்கின்” என்று பெருங்கதையிலும்,ஒத்து என்ற சொல் வேதம் என்ற பொருளில் வருகிறது.

”ஆரணத்தின் சிரம் மீது உறைசோதியை அந்தமிழால்” என்கிறார் கம்பர்.அதாவது,வேதத்தின் உச்சியில் விளங்கும் பரஞ்சோதியான நாராயணன் என்று சடகோபர் அந்தாதியில் ஆரணம் என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

 ”எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோர் இதுவே” என்ற குறுந்தொகைப்பாடலின் “உன் வேதத்தில் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் மருந்து இருந்தால் சொல்” என்று அர்த்தம் தரும் இவ்வரிகளில் எழுதாக்கற்பு எனும் சொல் வேதத்தைக் குறிக்கிறது.

 ”அந்தண்மை பூண்ட வருமறை யந்தத்துச் சிந்தை செயந்தணர்” என்கிறார் திருமூலர், அதாவது, அந்தணர் வேதங்களை அணவுவர் என்ற பொருளிலும்,

“அருமறையின் நெறிகாட்ட,அயன் பயந்த நிலமகளை” என்ற கலிங்கத்துப்பரணியின் வரிகளில், “வேதங்களில் கூறப்பட்டுள்ள ஒழுக்கங்களை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக, நான்முகன் படைத்த நிலமகளைக் கைப்பிடித்தவன்” என்று குலோத்துங்கச்சோழனைப் பாராட்டும் வரிகளிலும், அருமறை என்ற சொல் வேதத்தைக் குறிக்கிறது.

”வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து” என்று சிலப்பதிகாரத்தில் வேதம் என்னும் பொருளில் மறைநூல் என்ற வார்த்தைப் பிரயோகம் உள்ளது. ஆக,வேதம் என்ற பொருளில் ஒத்து,ஆரணம்,எழுதாக்கற்பு,அருமறை,மறைநூல் போன்ற சொற்கள் பிரயோகப்பட்டுள்ளன. இதே பொருளில் மேற்கூறிய சொற்களைத் தவிர்த்து, வேறு சொற்கள் உளவா எனத் தெரிந்துகொள்ள ஆசை. தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்.

சுஜாதா நினைவு நாள்

February 26, 2009

சுஜாதா நினைவு நாள்(27-Feb-2009) பற்றி எழுத யோசிக்கும்போது, “Toward the person who has died we adopt a special attitude: something like admiration for someone who has accomplished a very difficult task” என்ற freudன் கூற்று நினைவுக்கு வந்தது.இருந்தபோதும், சுஜாதா என்ற குருவிடமிருந்து தன்னார்வத்துடன் கற்றுக்கொண்டிருக்கும் அனேக ஏகலைவன்களில் நானும் ஒருவன் என்ற காரணமே இந்தப் பதிவை எழுதப் பணித்தது.
இந்த ஒரு வருடத்தில் நாம் இழந்தது சுஜாதாவின் எழுத்தை மட்டும் அல்ல. கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் பல தலைமுறைகளை படிக்க வைத்துக்கொண்டிருக்கும் சுஜாதாவின் சாதனை ரோமானிய வீரன் ஸ்பார்ட்டகஸ்ன் சாதனையை ஒத்தது. நல்ல புத்தகங்கள் மக்களிடம் போய்ச்சேர அவர் எடுத்த முயற்சியைத் தொடர்வதே,கற்கை நன்றே என்ற அவ்வையின் வாக்கையே குறிக்கோளாகக் கொண்டு, தமிழ் வாசகர்களின் ரசனையை தனது எழுத்து மூலம் உயர்த்திய இந்த மேதைக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று தோன்றுகிறது

Keatsian Despair,Chaos Theory,Deep Simplicity போன்றவற்றின் எளிமையான விளக்கங்களும்,அவருடைய வசன வரிகளில் தெறிக்கும் குறும்புகளும் ஏற்படுத்தும் ஆச்சரியத்தையும் விஞ்சி,இவற்றின் சிருஷ்டிகர்த்தா இன்று இல்லை என்ற நினைவின் தசரத சோகம் மேலெழுந்து கண்களின் ஓரத்தில் நீர் துளிர்ப்பதை தடுக்க இயலவில்லை.

எனினும்,

     “ ந ஜாயதே ம்ரியதே வா கதாசித்
      நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
      அஜோ நித்ய: சாச்வதோயம் புராணோ
      ந ஹன்யதே ஹன்யமானே சரீரே”
என்ற கீதையின் வரிகள் கொடுக்கும் நம்பிக்கையுடன் தொடர்வோம்.

sujatha